பனாரஸ் பல்கலை. தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிகாரி பதவிவிலகல்!
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காவல்துறை தடியடி நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவிவிலகிக் கொள்வதாக பல்கலைக்கழக அதிகாரி ஓ.என்.சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரனாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் மீது பாலியல் சீண்டல்கள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதே சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்ததையடுத்து, ஆத்திரமடைந்த மாணவிகள் சனிக்கிழமை இரவு பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைக் களைத்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தடியடியை நடத்திய பின், இதில் தொடர்புடைய இரண்டு மூத்த காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தடியடித் தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவிவிலகிக் கொள்வதாக பல்கலை. ஒழுங்கு நடவடிக்கைக்குழு அதிகாரி ஓ.என். சிங் தெரிவித்துள்ளார். இதனை பல்கலை. துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ச.ப.மதிவாணன்