
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், 10ஆம் தேதி இரவே பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை, இந்திய ராணுவம் அழித்து முறியடித்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்தது. சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதை அடுத்து, இரு நாட்டு ராணுவத் தலைமை இயக்குனர்கள் இடையே இன்று (12-05-25) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைகளின் அதிகாரிகளான ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, டிஜிஎம்ஓ ராஜீவ் காய், வைஸ் அட்மிரல் ஏஎன். பிரமோத் ஆகியோர் இன்று (12-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்றது. இந்தியாவின் போர் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள், அவர்களின் கட்டமைப்புக்கு எதிரானது. போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறினால் அதற்கு பதிலடி கொடுப்பது இந்தியாவின் கடமையாகும். பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்க பல அடுக்கு பாதுகாப்புகள் உள்ளன.
இந்தியாவின் பழைய ராணுவ தளவாடங்கள் கூட தாக்குதலின் போது மிகச்சிறப்பாக செயல்பட்டன. பயங்கரவாதிகளின் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக மாற்றுகிறது. பயங்கரவாதத்தின் போக்கையே பாகிஸ்தான் மாற்றி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பான ‘ஆகாஷ்’ அமைப்பஉ இந்தியாவிற்கு சிறப்பாக அமைந்தது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாகங்கள் நம்மிடம் உள்ளன. அவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஏவுகணைகளை தான் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வந்தது. தற்போது சீனாவின் உருவாக்கப்பட்ட ட்ரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துகிறது. ஆனால், சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை. இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியாவுக்கு குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராணுவத் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ராஜீவ் காய், “கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். நமது விமான நிலையங்களையும் தளவாடங்களையும் குறிவைப்பது மிகவும் கடினம். வழிபாட்டு தலங்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குகிறது. பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்க பல அடுக்கு பாதுகாப்புகள் உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்தியா தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் முக்கிய 11 விமானப்படை தளங்களை இந்திய விமானங்கள் தாக்கின. சீனாவின் பிஎல்-15 இ (PL-15E) ரக ஏவுகணைகளை இந்திய படைகள் சிதறிடித்தன. இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை. முப்படைகளின் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின” எனக் கூறினார்.