Skip to main content

ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து கருத்து-கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்

Published on 08/05/2025 | Edited on 08/05/2025
College professor suspended for criticizing Operation Sindoor

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.

9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ விமர்சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லோரா. இவர் சமூக வலைத்தளங்களில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் 'இந்திய ராணுவம் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளைக் கொன்றுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு இன்மை ஏற்படும். உணவு பற்றாக்குறை ஏற்படும் என கருத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவர் வெளிப்படுத்தி இருந்த கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பேராசிரியை லோராவை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்