
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், 10ஆம் தேதி இரவே பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை, இந்திய ராணுவம் அழித்து முறியடித்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனிடையே, போர் நிறுத்ததை வரவேற்றாலும், அதேசமயம் உள்நாட்டு பிரச்சனையான காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடான அமெரிக்கா எப்படி தலையிட முடியும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி,, “இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்டபோதே இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா வந்திருக்க வேண்டும். போர் தொடங்கிய 2 நாட்களில் அமெரிக்கா சமாதானம் செய்ததை பிரதமர் மோடி ஏற்றது தவறு” என்று கடுமையாக சாடியுள்ளார்.