prakash raj about vijay tvk politics

பிரகாஷ் ராஜ் தற்போது தமிழில் விஜய் நடிக்கும் ஜன நாயகன், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஓ.ஜி. உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். சினிமாவைத் தாண்டி அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார். தொடர்ச்சியாக பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஆகியோரின் அரசியல் குறித்து பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய்யையும் பவன் கல்யாணையும் மக்கள் அடிக்கடி ஒப்பிடுகிறார்கள். இருவரையும் 20 வருடங்களாக எனக்கு தெரியும். பவன் கல்யாண் அவரது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் சிரஞ்சீவியின் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். இதில் பவன் கல்யாணுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அதே போல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அனைவரும் அறிந்த இயக்குநர். விஜய் ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே அவரை அறிமுகப்படுத்த நிறைய படங்களை இயக்கினார்.

Advertisment

பவன் கல்யாண் ஒரு தசாப்தத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர். ஆனால் விஜய் அரசியலுக்கு புதிது. இத்தனை ஆண்டுகளில் இருவருடனும் நான் பழகிய போது நாங்கள் ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை. அவர்கள் நடிகர்கள், அவர்களின் புகழ் காரணமாக அரசியலில் நுழைந்திருக்கிறார்கள். பவன் கல்யாண் தனது கட்சி தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்த பின்னும் அவருக்குள் ஒரு தொலைநோக்கு பார்வை அல்லது மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு தெளிவான புரிதல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை . அதையே தான் விஜய்யிடமும் இருப்பதாக பார்க்கிறேன். ஆனால் பவன் கல்யாண் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும் போது அவர்களை ஒரு மாற்று சக்தியாக மக்கள் பார்ப்பார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு தேர்தலில் சீட் அதிகரிக்கலாம். ஆனால் பின்னர் அவர்கள் தங்களை நிரூபிக்க நேரிடும். விஜய் பேசும் வசனங்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் போராடுவது குறித்து அதில் ஆழமான புரிதல் இருக்கிறதா என்பது கேள்வி குறியே. பவன் கல்யாண் மிகவும் பிரபலமான நடிகர், ஆனால் நாட்டின் தலைவிதியை அவர் கைகளில் கொடுக்க வேண்டுமா? அவர் தனது சித்தாந்தத்தில் தெளிவானவர் அல்ல” என்றார்.