Skip to main content

“5 வருஷம் ஆகபோகுது, நியாயம் எப்போ கிடைக்கும்னு தெரியல..” - கண்ணீர் வடிக்கும் குடும்பம்

Published on 05/05/2025 | Edited on 05/05/2025

 

Justice not achieved in Jayaraj Bennix case even after 5 years

தமிழ்நாட்டில் கொரானா தாக்குதல் மரணங்களை விட எல்லோரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் போலீசின் சித்திரவதையால் தந்தை மகன் கொலையான வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது.  ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும்  நிலையில் வலுவான ஆதாரங்கள் உறுதியாக இருந்தும் ஜவ்வு மிட்டாய் போல இழுக்கப்படும் இந்த விசாரணையில் விரைவில் நீதி வழங்கப்படுமா என கண்ணீருடன் பரிதவிக்கின்றனர் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர்.

2020 ஆம் ஆண்டு உலகமே கொரோனாவின் கோர முகத்தினால் முடங்கிப் போய் இருந்தது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்ததாக கூறி வணிகர் ஜெயராஜ் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தந்தை போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து அவருடைய மகன் பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் இருவரிடமும் விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் போலீசால் துள்ளத் துடிக்க அரங்கேறிய கொடூர கொலை வெறி தாக்குதல் காரணமாக ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் நிலைகுலைந்தனர்.  ரத்தக் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன்  22ஆம்தேதி இரவு பென்னிக்ஸ், 23ஆம் தேதி அதிகாலையில் ஜெயராஜ் எனத் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ. பால்துரை  மற்றும் போலீசார் உட்பட 10 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் காவல்துறை விசாரித்து பின்னர் சிபிசிஐடி வசம் சென்றது. ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ஐ. பால்துரை இறந்துவிட்ட நிலையில், பல்வேறு கோணங்களில் நக்கீரன் புலனாய்வு செய்திகளில் வெளிவந்த அசைக்க முடியாத பல ஆதாரங்களின் காரணமாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட காவல்துறையை சேர்ந்த 9 பேர்  இப்போது வரை சிறையில் அடைபட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தொடக்க நாள் முதல் இந்த நிமிடம் வரை சாத்தான்குளம் கொலை வழக்கில் நக்கீரன் தனிக் கவனம் செலுத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது. சி.பி.ஐ. விசாரித்து வரும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை முதற்கட்டமாக தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை என மொத்தம் 2,427 பக்க குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி அணில் குமார், சி.பி.ஐ தரப்பு விசாரணை அதிகாரியான விஜயகுமார் சுக்லா, பெண் காவலர்கள் பியூலா, ரேவதி ஆகியோரின் சாட்சியங்கள் இவ்வழக்கில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. 105 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டும், 38 சான்று ஆவணங்கள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில் சம்பவம் நடைபெற்று. ஐந்தாண்டுகள் ஓடிவிட்ட சூழலில் வழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளதாலும், பொறுப்பு நீதிபதி தான் இந்த வழக்கை விசாரித்து வருவதாலும் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர். 

Justice not achieved in Jayaraj Bennix case even after 5 years

உயிரிழந்த ஜெயராஜ் மகள் பெர்சி நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், “எனது அப்பா ஜெயராஜ், தம்பி பென்னிக்ஸின் உடற்கூறாய்வு குறித்த ஆதாரப்பூர்வ தகவல்கள், இருவரது உடலிலும் இருந்த ரத்த காயங்களுடன் காணப்பட்ட போட்டோக்கள் வீடியோக்கள் நக்கீரனில் போட்டிருந்தார்கள். போலீசார் தான் அடித்து கொலை செய்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்களை நக்கீரனில் வெளியானது. அப்படி இருந்தும் கூட அதற்கான நீதி எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஜூன் 20ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது என் தம்பி நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடக்கிற அந்த வீடியோவையும், அணிந்திருந்த  கைலியில் ரத்த கரைகளுடன் இருந்ததை முழு விவரத்துடன் நக்கீரன் பதிவு செய்திருந்தது. இதில் போலீஸ் தரப்பு புதிதாக தேடி தேடி ஜோடிப்பதற்கு ஒன்றுமே  இல்லாத வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியக்கூடிய வகையில் வலுவான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் கூட எங்களுக்கான நீதியை இன்னும் வழங்காமல் காலதாமதப்படுத்துகிறாங்க.

அந்த நேரத்தில் நிறைய அரசியல் கட்சிகள் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தாங்க. ஆனா, தற்போது எல்லோருமே கொஞ்சம் அமைதியா தான் இருக்காங்க. இதற்கான காரணங்கள் என்னன்னு தெரியல. அது கூட ஒரு விதமான பயமா இருக்கு. என் குடும்பங்கள் எங்கள் வக்கீல்கள் அந்த கேஸை பாலோ செய்றோம். பத்திரிக்கை துறை நண்பர்களும் இதில் எங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்துகிட்டு இருக்காங்க. கடந்த ஆறு மாசமா இந்த வழக்கில் ஜட்ஜ் கொடுங்க என நிறைய இடங்களில் முறையிட்டு இருக்கிறோம். ஆனாலும் கூட எங்களுக்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. வரும் ஜூன் மாதத்தோடு சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் முடியப்போகிறது. 

இந்த இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட கஸ்டடி டெத் நடந்து விட்டன.  தவறு நடக்கும் போது விரைவாக கடுமையான நீதி கொடுக்கப்படும் போது தான் அடுத்த காரியங்கள் நடக்காமல் இருக்கும். எங்களைப்போல எத்தனையோ பொதுமக்கள் பாதிக்கப்பட்டு தான் இருக்காங்க. தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த வின்சென்ட் லாக்கப் டெத்துக்கு 25 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஜட்ஜ்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவங்களுக்கு நீதியை சீக்கிரமே கொடுத்திருந்தால் எங்களுடைய கஸ்டடி டெத் நடக்காமல் கூட இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஒவ்வொரு கேஸ்லையும் காலதாமதம் நடக்கும் போது குற்றம் இளைத்தவர்கள் எல்லாத்தையும்  ஆண்டு அனுபவித்து செத்துப் போய் விடுகிறார்கள். உயிரைப் பறிகொடுத்து இழந்த எங்களுடைய குடும்பங்கள் மட்டும்தான் நாங்க வேதனையில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சட்ட திட்டங்கள் தெரிந்து குற்றம் செய்தவங்களுக்கு விரைவாக தண்டனை கொடுக்கணும். அப்போதுதான் அது இன்னொரு குடும்பங்களை பாதிக்காது. அதைத்தான் நாங்கள் முதலிலிருந்தே  நினைக்கிறோம். இவ்வளவு தூரம் போராடுவதே எங்களை போல,  நாங்க பட்ட வேதனை இன்னொரு குடும்பங்கள் படக்கூடாதன்னு தான்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் டைரக்ஷன் கேட்கும் போது அவங்க இரண்டு மாசத்துல முடிங்கன்னு சொல்றாங்க. ஆனால் இங்கே நீதிபதியே நியமிக்கப்படாத பட்சத்தில் எப்படி இரண்டு மாசத்துல முடிக்க முடியும். இன்சார்ஜ் ஜட்ஜ் வாரத்தில் ஒரு நாள் தான் அதுவும் இரண்டு மணி நேரம் தான் விசாரணை செய்து கொண்டிருக்கிறார். கைதான போலீஸ் ஒன்பது பேரும் ஒன்பது வழக்கறிஞர்கள் வைத்து கேட்ட கேள்வியைவே திரும்பத் திரும்ப கேட்டு திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை தினந்தோறும் நடக்கிற மாதிரி இருந்தால் தான் எங்களுக்கு  விரைவாக நீதி கிடைக்கும் என நம்புறோம். இதை ஒரு கோரிக்கையாகவே முன் வைக்கிறோம்.  ஏனெனில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அனைவர் மீதும்  போலீஸ் தரப்பு அவ்வளவு சப்போர்ட்டிவா இருக்காங்க. நம்ம எல்லாம் ‘ஒரே பேமிலி.. ஒரே பேமிலி... ’ எனச் சொல்லி எஸ்கார்டு வரக்கூடிய போலீஸ்காரங்க கிட்ட சொல்லும்போது அவங்க உதவி செய்றாங்க. கைதாகியுள்ள போலீஸ் யாரும் தெரியாமல் எதுவும் செய்யவில்லை. நீ செத்தால் சாவு. நான் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் அடித்ததா அந்த ஸ்டேசன்ல பணி பரிந்த  போலீஸ் கொடுத்த ஸ்டேட்மெண்ட்லயே இருக்குது. செத்தா சாவு என்கிற இந்த அதிகார திமிரை அவங்க குடும்பத்துல சொல்லுவாங்களா.. காண்பிப்பாங்களா...போலீஸ்காரங்களுக்கும் பேமிலி இருக்குல்ல அப்படின்னு எங்களுக்கு வாட்ஸ் அப்ல ஒரு மெசேஜ் எல்லாம் வந்திருந்தது.

Justice not achieved in Jayaraj Bennix case even after 5 years

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு குடும்பம் இல்லையா? நாங்க ஒவ்வொரு நிமிஷமும் வேதனைப்பட்டுகிட்டு இருக்கிறோம். என் அப்பா என் தம்பி மீது எந்த குற்ற பின்னணியும் கிடையாது. விடிய விடிய ஸ்டேஷனில் வைத்து அடித்தபோது அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் இப்போ கைதாகி இருக்கிற போலீஸ்காரங்க மனைவி மக்கள் இருந்திருக்காங்க. அப்போ  உங்களுக்கு குடும்பம் இருக்கு. எங்களுக்கு குடும்பம் இல்லையா? நீதித்துறையை நாங்கள் முழுமையா நம்புறோம்.  பொதுமக்களும் மீடியாக்களும் அந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யலைன்னா  ஒண்ணுமே இல்லாம பண்ணியிருப்பாங்க. என் தம்பி பென்னிக்ஸ் இறந்தவுடன் பென்னிக்ஸ்ங்கிற பெயரில் குற்ற பின்னணி ஏதாவது இருக்கான்னு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் எல்லா ரெக்கார்டுயும் தேடி இருக்காங்க. இவங்க தப்பிக்கிறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீம்க்கும்  போக அப்பவே ரெடியா இருந்திருக்கிறாங்க.

உயர்நீதிமன்றம் தானா முன் வந்து இந்த வழக்கை எடுக்கலைன்னா எந்த ஒரு காரியங்களும் நடந்து இருக்காது. நாங்களே செப்ரேட்டா வழக்கு போட்டு இருந்தா கூட எங்களை பயமுறுத்தி இருப்பாங்க. மிரட்டி இருப்பாங்க. நாங்க ஒரு சாதாரண குடும்பம். எங்க அப்பா பனங்கட்டை வியாபாரம் பாத்தாங்க. என் தம்பி ஒரு கடை வச்சிருந்தான். நிம்மதியா வாழ்ந்து கொண்டிருந்த எங்க குடும்பத்தை சீரழித்துவிட்டு... அவங்களுக்கு பெயில் கிடைக்கலை என்பதற்காக எங்களுக்கு குடும்பம் இல்லையான்னு சொல்கிறார்கள். கல்யாண வீட்டுக்கு வருவது மாதிரி தான் கோர்ட்டுக்கு வருவாங்க. கைதான போலீஸ்காரங்களுக்கு டூட்டில இருக்கிற போலீஸ்காரங்க சல்யூட் அடிக்கிறாங்க. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கோர்ட்டை விட்டு வெளியே சென்று விடுவார். அஞ்சு வருஷம் முடிஞ்சிருச்சு. எங்களுக்கான நீதி இந்த வருஷத்துலையாவது கிடைக்கும்னு நம்புறோம். நீதித்துறையிடமும் அதை நாங்கள் வேண்டுகிறோம். நக்கீரனில் அனைத்தும் வலுவான ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. நீதிக்காக எங்களால் எவ்வளவு பாடுபட முடியுமோ அந்த அளவுக்கு நாங்கள் பாடுபடுறோம்” என்றார் கண்ணீருடன்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் தரப்பின் வக்கீல் ராஜீவ் ரூபஸ் நக்கீரனிடம் பேசுகையில், துரதிஷ்டவசமாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாமல் போயிட்டாங்க. அதனால இந்த வழக்கின் விசாரணை என்பது மிகவும் காலதாமதமாகிவிட்டது.  வழக்கு இப்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. எனவே விசாரணையை விரைந்து முடிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. அப்போதுதான் முறையான நியாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக சிபிஐ தரப்பை தான் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி இல்லாததால் விசாரணை மெதுவாக நடக்கிறது. நீதிபதி நியமித்தாலும் டெய்லி விசாரணை நடக்கிற பட்சத்தில் தான் விரைந்து நீதி கிடைக்கறதுக்கு ஒரு வழிவகை செய்த மாதிரி இருக்கும்” என்றார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி