
கடந்த 2018-19 ஆண்டுகளில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்'. இளம் பெண்கள், மாணவிகள் என பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை நக்கீரன் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையானது நடைபெற்றது. சிபிஐயின் சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் ,மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார், வசந்தகுமார் ஆகிய 9 பேரும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 05/04.2025 அன்று இறுதி விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்த வழக்கின் பின்னணியை பார்க்கையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டியதோடு பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிர்ச்சிக்குரிய வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழக முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தன.

முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சதீஷ், ஹேரன் பால், பாபு, அருண்குமார், அருளானந்தம் என மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் பெண்களைக் கடத்துதல்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தல்; ஆபாசமாக வீடியோ பதிவு செய்தது; பெண்களினுடைய கண்ணியத்தை குழைத்தது; பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது; அதனை பயன்படுத்தி பெண்களை மீண்டும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது உள்ளிட்ட 5 முதல் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக திருநாவுக்கரசின் ஐபோனில் இருந்த சுமார் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் முக்கிய ஆதாரமாக கைப்பற்றப்பட்டது. 'அண்ணா பெல்ட்டால அடிக்காதிங்கண்ணா' என்ற ஒரு பெண்ணின் மரண ஓல அலறலை அம்பலப்படுத்தி எச்சரிக்கை மணி அடித்தது நக்கீரன். வீடியோவில் இருந்த பெண்களை கண்டுபிடித்து சிபிஐ ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி தங்களுக்கு நடந்த கொடூரங்களை வாக்குமூலங்கள் ஆக்கி உள்ளனர். எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக விசாரணைகள் நடைபெற்றது. அதன் பிறகாக சபரிராஜன் என்ற இரண்டாவது நபர் சேர்க்கப்பட்ட போது சபரி ராஜன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இதேபோல நூற்றுக்கணக்கான ஆபாச வன்கொடுமை வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.

ஆசை வார்த்தை கூறி பெண்கள் காரில் அழைத்துச் செல்லப்பட்டு ஆனைமலை பகுதியில் உள்ள சின்னப்பம்பாளையம் பகுதியில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிலேயே இத்தனை கொடூரங்களும் அரங்கேறி உள்ளது சிபிஐ விசாரணையில் தெரிந்தது. 'பொள்ளாச்சி அட்டாக் பாய்ஸ்' என்ற வாட்சப் குழுவில் பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி; காதல் வலை வீசி அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களை பண உதவிகள் செய்வதாக கூறி அவர்களை முதலில் நண்பர்களாக ஆக்கிக் கொண்டு பின்னர் அவர்களை மிரட்டி வன்கொடுமை செய்து வீடியோக்களை பதிவு செய்து கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
ஆறு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 1500 பக்கங்கள் கொண்ட மூன்று குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கு நடந்த கொடூரங்களை வாக்குமூலமாக பதிவு செய்த பொழுது கண்ணீர் கோலத்துடன் ரண ரணமாக விவரித்துள்ளனர். அதனை பதிவுசெய்த நீதிமன்ற அலுவலர்களும் தலைகுனிந்து கண்ணீர் வடித்துள்ளனர்.இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை விடிந்ததும் 13/05/2025 பொள்ளாச்சி கொடூர வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துள்ளது.