
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பகல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்தியாவின் இந்த பதில் தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய இராணுவ நடவடிக்கையை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய இராணுவ நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமே ஆகும். எனவே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றியமையாத தேவையாக உள்ளது.
அதேவேளையில், இந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்கவும், நாட்டின் அமைதியைப் பாதுகாக்கவும், நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய இராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்னும் முக்கியத்துவத்தை விசிக சுட்டிக்காட்ட விரும்புகிறது. பாகிஸ்தானில் ஒளிந்துள்ள பயங்கரவாதிகள் மீதான இந்த நடவடிக்கை, நமது நாட்டில் இஸ்லாத்தைப் பின்பற்றும் குடிமக்கள் மீதான வெறுப்பாகத் தடம் புரண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளுமாறும் ஒன்றிய அரசாங்கத்தை விசிக கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.