Skip to main content

“இந்தியாவின் தற்காலிக மகிழ்ச்சி துக்கத்தால் மாற்றப்படும்” - பாகிஸ்தான் எச்சரிக்கை

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

Pakistan warns India will be given a befitting reply on operation sindoor

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  இன்று (07-05-25) நள்ளிரவு 1 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் உள்பட முப்படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. 

நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது என்ற மிக முக்கியமான பயங்கரவாத தலைமையகம், தரைமட்டமானது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 38 காயமடைந்ததாகவும், பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்துள்ளதாவது, “பஹல்வல்பூரின் அகமது கிழக்குப் பகுதியில் உள்ள சுபானுல்லா மசூதி, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய மூன்று இடங்களில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதலை இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானின் எல்லைக்குள் வந்து ஊடுருவ அனுமதிக்கப்படவில்லை. நான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்கிறேன். பாகிஸ்தான் எந்த நேரத்திலும் இடத்திலும் இதற்கு பதிலளிக்கும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பதிலளிக்கப்படாமல் போகாது. இந்த தாக்குதலால் இந்தியா அடைந்துள்ள தற்காலிக மகிழ்ச்சி, துக்கத்தால் மாற்றப்படும்” எனத் தெரிவித்தார். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பல், பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்