/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chandrachud-ni.jpg)
டெல்லிஉச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா,“எனது தந்தைக்கு மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)