
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சாந்தகுமார் (50). இவர் கடந்த 20 வருடங்களாக தனது தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆண்டுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் நாட்டுக் கோழிகள் அதிக செலவில்லாமல் வளர்த்து சம்பாதித்து வருகிறார். குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டுக் கோழி வளர்ப்பில் சம்பாதிக்கும் வழிகள் என்ன என்ற நமது கேள்விக்கு அவரது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
வறட்சியான மாவட்டம் நெல் விவசாயம் மட்டுமே செய்யும் தன்மையுள்ள வயலில் மழைத் தண்ணீரை நம்பி ஒரு போகம் நெல் விவாயம் செஞ்சோம். பிறகு ஆழ்குழாய் கிணறு அமைத்து நெல் விவசாயம் செய்யும் போது தான் தரிசு நிலத்தில் நாட்டுக் கோழி வளர்க்கலாம் என்ற எண்ணம் வந்து 20 வருசத்துக்கு முன்னால கோழி வளர்ப்பை தொடங்கினேன். தரிசு நிலம் என்பதால் நிழலுக்கு சின்னதா கொட்டகை போட்டேன். ஆனால் அது போதவில்லை. அதனால தென்னங்கன்றுகளை நடவு செய்து வளர்த்து தோப்பை உருவாக்கிய பிறகு கோழிகள் நிழலில் நின்றது.
நாம் வளர்த்த கோழி முட்டைகளை கோழிகளிடமே அடை வைத்து குஞ்சுகளை இறக்கினோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒரே நேரத்தில் அடை வைத்து குஞ்சு பொறிக்க வைத்து குஞ்சுகளை கோழிகளிடம் இருந்து பிரித்து தனி கொட்டகையில் வைத்து தடுப்பூசிகள் போட்டு அதற்கான தனி தீவனங்களை வாங்கி போட்டு சுமார் 250 கிராம் எடை அளவில் வளர்ந்த பிறகு வெளியே விடுவோம். அதனால நோய் தாக்குதல் இறப்பும் குறைகிறது.
தீவனங்களுக்காக நெல்லை அவித்து அரைத்த புழுங்கல் தவிடு பழைய நெல் மட்டும் கொடுக்கிறோம். பச்சை நெல் தவிடு, புது நெல்லில் பூச்சிக்கொல்லி மருந்து தாக்கம் இருக்கும் என்பதால தான் புழுங்கல் தவிடும் பழைய நெல்லும் போடுறோம். மற்ற நேரங்களில் தோப்பு முழுவதும் சென்று இரை தேடும். நாய்களின் தொல்லை அதிகமாக இருந்ததால் நாங்களே சில நாய்களை வளர்ப்பதால் வெளி நாய்களை உள்ளே விடாமல் பார்த்துக்கும். பெரிய அளவில் செலவு செய்து கொட்டகை போடுவதில்லை. ரொம்ப முக்கியமாக மீன் கழிவுகளை கோழிகளுக்கு போடுவதால் நோய் தாக்கம் குறைகிறது.

எங்கள் பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் திருவிழா, கல்யாணம், விருந்து என பல நிகழ்ச்சிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் வந்து வாங்கிட்டுப் போறாங்க. பெட்டைக் கோழி கிலோ ரூ.500, சேவல் கிலோ ரூ.400க்கும் விற்கிறோம். நானும் என் குழந்தைகளும் தான் பண்ணையை பார்த்துக்கிறோம். ஆயிரம் கோழிக்கு வருசத்துக்கு சுமார் ஒன்றரை லட்சம் செலவாகும் ரூ.5 லட்சம் வரை கோழிகளை விற்கிறோம். வேறுகலப்பு ரகங்களை வளர்ப்பதில்லை” என்றார். அவரது நாய்கள் கோழிகளோடு சுற்றி சுற்றி வருகிறது. அதே நேரத்தில் வெளி நாய்களோ வெளி நபர்களோ வந்தால் விரட்டுகிறது.