
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், 10ஆம் தேதி இரவே பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை, இந்திய ராணுவம் அழித்து முறியடித்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் பெயர் எதிரொலியால், புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு சிந்தூரி என்ற பெயர் வைக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்திய அதே நாளில், பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் குந்தன் குமார் மற்றும் சிம்பிள் தேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வைத்ததன் காரணமாக, தங்கள் மகளுக்கும் ‘சிந்தூரி’ என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மே 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு `சிந்தூர்’ என குடும்பத்தினர் பெயரிட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்திய ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில் தங்களது குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.