பனாரஸ் பல்கலை. தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் யோகி உத்தரவு!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், கடந்த வியாழன் இரவு மாணவி ஒருவரிடம் மர்ம நபர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பல்கலை. நிர்வாகத்தைக் கண்டித்து ஏராளமான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலர் பல்கலைக்கழக துணைவேந்தரின் வீட்டை முற்றுகையிட முயன்றபோது காவல்துறை தடியடி நடத்தியது. இதில் மாணவிகளும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தடியடி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுவிவரங்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்க மண்டல காவல் ஆணையரிடம் உத்தரவிட்டுள்ளதாக உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்ற பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இன்னமும் இயல்புநிலை திரும்பாததால், பல்கலை. வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தசரா பண்டிகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்திற்கு முன்கூட்டியே வரும் அக். 2ஆம் தேதி வரை விடுமுறை வழங்கி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்