
சென்னை புறநகர் ரயில், மின் தடத்தில் திடீரென ஏற்பட்ட பழுதால் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலானது திருவள்ளூர் அடுத்துள்ள மணவூர்- திருவாலங்காடு இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிறுத்தப்பட்டது. சிக்னல் போடப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக பயணிகள் கருதிய நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இறுதியில் மின் தடத்தில் ஏற்பட்ட பழுதால் ரயில் நிறுத்தப்பட்டதை அறிந்து பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்திலேயே நடந்து சென்றனர். தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மின் தடத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த ரயில் தடம் வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.