
நாமக்கல்லில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட நிர்வாகி தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடி, இறுதியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இந்து முன்னணியில் தீவிரமாக இயங்கி வரும் ஜெகதீசன், இந்து முன்னணி அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த பொழுது ஜெகதீசனின் மனைவி கீதாவை சில மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கி கொன்றதாகவும், இதில் எனக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஜெகதீசன் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் மனைவிய வெட்டினர். அதை தடுக்கும் முயன்ற பொழுது தனக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது என ஜெகதீசன் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
ஜெகதீசன் சொன்னதை உண்மையென நம்பி அக்கம்பக்கத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்த பொழுது ஜெகதீசன் சொன்னது பொய் என்பது தெரிந்தது. அவர் சொன்னதைப்போல் மர்ம நபர்கள் யாருமே வீட்டிற்கு வராதது தெரிந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் ஜெகதீசன் பக்கம் திரும்பியது. கிடுக்குப்பிடியாக ஜெகதீசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெகதீசன் அவருடைய மனைவி கீதாவிற்கும் இடையே சில ஆண்டுகளாகவே குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலின் போது ஜெகதீசனே கீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.