Skip to main content

நீட் தேர்வை நீக்கு! அனிதாவிற்கு நீதி கொடு!! - ஐநா முன்பு முழங்கிய தமிழர்கள்

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
நீட் தேர்வை நீக்கு! அனிதாவிற்கு நீதி கொடு!! - ஐநா முன்பு முழங்கிய தமிழர்கள்

மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, கலந்தாய்வும் நடந்து முடிந்திருந்தாலும், நீட் எதிர்ப்பு முழக்கங்கள் இன்னமும் வலுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.



தமிழகத்தில் நீட் தேர்வினால் தனது மருத்துவக்கனவைத் தொலைத்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டும், மாணவி அனிதாவிற்கு நீதி கேட்டும் போராட்டக்காரர்கள் முழங்கினர்.

இந்தப் போராட்டமானது உலகம் முழுவதும் இன்னமும் வலுக்குறையாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலக நாடுகளின் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அமெரிக்கவாழ் தமிழர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு நீட் விலக்கு கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகம் முன்பாக கூடிய அமெரிக்கவாழ் தமிழர்கள், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் ஒருவர், ‘நீட் எனும் நுழைவுத்தேர்வின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவு பறிக்கப்படுகிறது. அது தமிழகத்தின் சமூக கட்டமைப்பையே குழைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று. தமிழகத்தில் இதற்கு முன்னர் நீட் இல்லாமல்தான் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. அதுபோல தமிழத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு தந்து, மிகப்பெரிய சமூக அநீதியில் இருந்து தமிழத்தைக் காக்கவேண்டும். உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நீதி வழங்க வேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட்டால்தான் இதுமாதிரியான பிரச்சனைகள் இனி தொடராமல் இருக்கும். அனிதாவின் நிலை வேறெந்த மாணவருக்கும் நடக்கக்கூடாதென்றால், தமிழத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கவாழ் தமிழர்களின் இந்த முற்றுகையின்போது, ஐநா பொதுக்குழுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அமெரிக்காவில் தமிழர்கள் நடத்திய இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்