
சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது.
பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது. அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுவோம் என்று கூறிய 13 கிராமங்களின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழுவினரால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் போராட்டக் குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
தொடர்ந்து கோட்டாட்சியரும் வட்டாட்சியரும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர்களும் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனக் கூறிய பின் பேரணியை கைவிட்டனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கை, நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.