
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பெரும் நம்பிக்கையைத் தரக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. எந்த விதமான பாரபட்சமின்றி அவர்களுக்கு அபராதத்துடன் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோன்று பாதிக்கப்பட்ட பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் தகவல்கள் வெளியிடாமல் விசாரணை நடத்தி முடித்திருப்பதையும் வரவேற்க வேண்டும். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது பெண்கள் அச்சமின்றி தைரியமாக வெளியே கூறுவார்கள்.
குற்றவாளிகளைக் கைது செய்யவும், சம்பந்தப்பட்டவர்களைக் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கவும் கூட அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம்(அதிமுக) தயங்கிய நிலையில், பல போராட்டங்களை நடத்தி, நக்கீரன் போன்ற பத்திரிகைகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தன் காரணமாகவே இந்த பாலியல் விவகாரம் வெளியுலகத்திற்கு வந்து தற்போது அதில் நியாயமும் கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் போது இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாமல் தைரியத்துடன் வெளியே சொல்ல வேண்டும். அதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை இந்த வழக்கின் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
வழக்கின் விசாரணையின் போது குற்றவாளிகளின் பெற்றோர்களுக்கு வயதாகிவிட்டது, அதனால் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் தண்டனையைக் குறைத்து வழங்க வேண்டும் என்பதுபோல் வாதிடப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த காரணத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், இப்படிப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அவர்களின் பெற்றோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கமாட்டார்கள்.
ஆண் பிள்ளைகளிடம் பெண்களை சக மனுஷியாக மதிக்க வேண்டும். தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களிடம் அத்துமீறும் உரிமை எந்த காலத்திலும் முதலில் உனக்கு கிடையாது. அவர்கள் என்ன உடை உடுத்தினாலும், எந்த நேரத்தில் எங்கே இருந்தாலும், யாராக இருந்தாலும் நீ மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். அப்படி வளர்த்தால் இந்த சமூகம் நிச்சயம் மாறும். ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் அவர்களை சரியாக வளர்த்தால், பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு எந்த விதமான அச்சமும் வராது. அதனால் ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும்.
பொள்ளாச்சி விஷயத்தை முதன் முதலில் நக்கீரன் அம்பலப்படுத்தியபோது தங்கள் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக அதிமுக குற்றம் சாட்டியது; ஆனால் தற்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறதே?
அவர்களின் ஆட்சிக் காலத்தில் எந்த பிரச்சனையும் வெளியே வந்துவிடக் கூடாது என்று அவர்கள்(அதிமுக) பல விஷங்களை முன்னெடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம். அதையெல்லாம் மீறித் தான் இன்றைக்கு உண்மை வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பின் மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரு தவறு நடக்கும்போது, தொடர்ந்து போராடினால் அதற்கான நியாயம் கிடைக்கும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று மன சோர்ந்து விடாமல் போராடினால் நிச்சயம் நமக்கான நியாயம் கிடைக்கும். பெண்களுக்கு இந்த உலகத்தில் எல்லாருக்கும் சமமாக வாழக்கூடிய உரிமை இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் நினைத்தபடி தீர்மானித்துக்கொள்ள உரிமை இருக்கிறது. அதனால் வரக்கூடிய பாதிப்புகளை மௌனமாக தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கண்டிப்பாக நியாயம் கிடைக்கும், அதனைப் பெற வேண்டிய உரிமை உங்களுக்கு இருக்கிறது” என்றார்.