
ஆறாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சீனியர் மாணவனை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொலை செய்த மாணவனை போலீசார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப கைது செய்ய முயன்றபோது கொலை செய்ததை கூட உணராமல் 'அம்மாவை விட்டுவிட்டு வர மாட்டேன்' என அடம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவனுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவன் ஐந்து ரூபாய்க்கு நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அதைப் பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாக தாக்கி சண்டை போட்டு கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த ஆறாம் வகுப்பு மாணவன் கத்தியை எடுத்து வந்து எட்டாம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக குத்தியுள்ளான்.

இதில் எட்டாம் வகுப்பு மாணவன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையில் ஈடுபட்ட ஆறாம் வகுப்பு மாணவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். கொலை செய்து விட்டதைக் கூட அறியாத அந்த பிஞ்சு சிறுவன் 'நான் உங்களுடன் வரமாட்டேன். அம்மாவை விட்டுவிட்டு வரமாட்டேன்' எனக் கெஞ்சினான். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.