Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : “விசாரணையின் போது நடந்தது என்ன?’ - அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Pollachi case What happened during the investigation Govt lawyer explains

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (12.02.2019) 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “தனக்கு ஏற்கனவே பழக்கமான சபரிராஜன் என்பவருடன் காரில் சென்ற போது சபரிராஜனுடன் இருந்த திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனர்” எனத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும்.

இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட  13 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா (மகளிர்) கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேலும் இந்த வழக்கில் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு என இருதரப்பு வாதங்களும், அரசு சார்பில் பதில் வாதமும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (28.04.2025) முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்நிலையில் நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. முதல் குற்றவாளியான சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும், சதிஷுக்கு 3 ஆயுள் தண்டனையும், வசந்த குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும்,  மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், ஹேரேன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருளானந்தம், அருண்குமார் மற்றும் பாபுவுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும்  விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக தண்டனை விவரங்கள் வெளியாவதற்கு முன் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடே எதிர்பார்த்திருந்த பரபரப்பான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் 9 எதிரிகளும் குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வயது, திருமணம் ஆகாதவர்கள், வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற உடல் நிலை காரணங்களையும் சொல்லி லீனியன்சி கேட்டுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Pollachi case What happened during the investigation Govt lawyer explains

இது ஒரு அரிதான வழக்கு. பெண்களுக்கு  எதிரான வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பான ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும். அதன்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் 376டி என்ற பிரிவின் கீழ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு 376 கீழ் 2 என்ற பிரிவின் கீழ் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்துக்கு உட்படுத்துவது உள்ளிட்ட 2 முக்கியமான அபென்ஸ் கன்விஷன் செய்யப்பட்டுள்ளது. எனவே உயர்ந்த பட்ச தண்டனையாகச் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெளிவாக மிகவும் அழுத்தமாக உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் கிடைக்கும். அரசு தரப்பில் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். மேலும்  எங்களோட வாதத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளோம். டிஃபன்ஸ் பொறுத்தவரைக்கும் அவர்கள் எல்லாருமே இளம் வயதினர், திருமணம் ஆகாதவர்கள், வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற வகையில் லீனியனன்சி கேட்கிறார்கள். அதை தவிர வேற வேறு எதுவும் அவர்கள் வைக்கவில்லை. இயல்பாக எல்லா குற்றவாளிகளும் இது போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம் தான். அதனால் அரசு தரப்போட கோரிக்கை ஏற்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். முதலில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய லோக்கல் போலீசார் இது குறித்து விசாரணை (இன்வெஸ்டிகேட்) செய்கிறார்கள்.

Pollachi case What happened during the investigation Govt lawyer explains

அதன் பின்னர் 20 நாட்களில் சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 40 நாட்களில் சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது. அதாவது 2 இலிருந்து 3 மாத காலத்திற்குள் 3 விசாரணை முகமை (ஏஜென்சி) நடத்தியது. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு வந்த பின் எந்த பெண்களும்  முன் வந்து புகார் கொடுக்க முன் வரவில்லை. இவ்வாறு முன்வராத பட்சத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் உள்ள வீடியோக்கள் அடிப்படையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் (கன்வின்ஸ்) செய்து அவர்களுக்கு உளவியல் (சைக்கலாஜிக்கல்) ரீதியாக கவுன்சிலிங் கொடுத்து நம்பிக்கை ஊட்டினோம்.

பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து இந்த வழக்கில் சாட்சி சொல்லப்பட்டன. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் மொத்தம் 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்த சாட்சிகளில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சி ஆகவில்லை. அதோடு பாதிக்கப்பட்ட பெண்களும் பயமின்றி சுதந்திரமாகச் சாட்சி சொல்லி இருக்கிறார்கள். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஒரு லீனியன்சியும் கொடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில்  உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை வைத்து சைட்டேஷன் தீர்ப்புகளை முன்வைத்து வாதங்களை வைத்திருக்கிறோம். மின்னணு சாட்சிகள், பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து விசாரணை நடத்தப்பட்டது. இது விசாரணை அதிகாரிகளுக்கு மிகப் பெரிய ஆதரவாக (சப்போர்டிவாக) இருந்தது.

Pollachi case What happened during the investigation Govt lawyer explains

அதிலும் குறிப்பாக அந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி, வீடியோ எடுக்கப்பட்ட இடங்கள் எல்லாமே தெளிவாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது வாய்மொழி சாட்சியாக  இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்களுடைய வாய்மொழி சாட்சிகள் மட்டும் இல்லாமல் விஞ்ஞான ரூபமான சாட்சிகளை  சிபிஐ தரப்பில் வந்து தெளிவாகப் புலனாய்வு செய்து அதை நீதிமன்றத்தில் சாட்சியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட சாட்சிகள் (எவிடன்ஷ்கள்) வல்லுநர்கள் மூலமாக மீட்கப்பட்டது. அதன் அடிப்படையில் சில பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டிருந்தோம். சில வீடியோக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தது. அதை ரிட்ரீவ் (மீட்பு) பண்ணிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப உதவி மூலம் (டெக்னிக்கல் சப்போர்ட்) விஞ்ஞான பூர்வமா அடையாளம் காணப்பட்டு, அந்த வீடியோக்கள்ல எந்தவிதமான உண்மைக்குப் புறம்பான (மேனிபுலேஷன்)  எடிட்டிங் இல்லை என்றதுக்காக பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் அறிக்கை இந்த வழக்கில் முக்கியமான ஒரு சாட்சியாக உள்ளது. 1 முதல் 9 வரை உள்ள 9 குற்றவாளிகளுக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம். நீதிமன்றம் அதனை ஏற்கும் என்று நம்புகிறோம். சட்ட்பிரிவு 120 பி, 354, 354 பி என எல்லா சட்டப் பிரிவுகளிலும் அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும், இந்த மாதிரி வழக்குகள் மீண்டும் தமிழ்நாட்டிலோ, வேறு எங்கேயும் நடக்கக் கூடாது. இந்த தண்டனைவந்து மற்றவர்கள் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற வகையில் கடுமையான வாதங்களை முன் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்