
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் மனைவி திருமணத்தையும் மீறிய உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஒரே இரவில் மூன்று பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் புவனேஸ்வரி என்பவரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புவனேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற நபருக்கு இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக புவனேஸ்வரியிடம் பாலு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இதனால் மனைவி புவனேஸ்வரி தன்னுடைய தாய் பாரதியின் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று புவனேஸ்வரியை தேடி அவருடைய மாமியார் வீட்டுக்குச் சென்ற பாலு, மாமியார் பாரதியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் மனைவி புவனேஸ்வரியுடன் முறையற்ற தொடர்பில் இருந்த விஜய்யின் தந்தை அண்ணாமலை, தாய் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மூன்று பேரையும் ஒரே இரவில் கொலை செய்துவிட்டு வாலாஜா காவல் நிலையத்தில் பாலு சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரேநாள் இரவில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.