Skip to main content

7 வருடமாக போக்கு காட்டிய கொலைகாரர்கள்; தட்டித் தூக்கிய காவல்துறை!

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

4 suspects wanted in  case 7 years ago arrested in thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  சடலத்தை கைப்பற்றி கொலை வழக்குப் பதிந்து கொலையான நபரின் உடலில் இருந்த அங்க அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த நபர் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒத்த கை பொன் குமார்  என்பதும், இவர் மீது விருதுநகர் மாவட்டத்தில் கோயில்களில் உண்டியல் திருட்டு, பிக்பாக்கெட், வழிப்பறி என 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மம்சாபுரம் காவல் நிலையத்தில் க்ரைம் ஹிஸ்ட்ரி ஷீட் ஓப்பன் செய்திருப்பதும் தெரிய வந்தது. இவர் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகளைக் கடந்தும் இவ்வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சங்கரலிங்கபுரம் போலீஸ் திணறி வந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சண்முகம்,  செல்லத்துரை காவலர்கள் கார்த்திக் ராஜா,  சரவணகுமார்,  கார்த்திக்  அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. பழைய சாட்சிகள், மொபைல் போன்  சிக்னல்கள், டிஜிட்டல் ஆதாரங்கள்,  கொலைக்குப் பிறகு கிராமத்தை விட்டு வெளியேறிச் சென்றவர்கள் யார்.. யார்.. என வேறு கோணத்தில்  தனிப்படை போலீசார் துப்பு துலக்கினர். இதில் கிடைத்த புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை வைத்தும் சந்தேக நபர்களின் வாக்குமூலத்தை  ஒப்பிட்டு பார்த்தும் விசாரணை மேற்கொண்டதில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த நாடக நடிகர் 64 வயதான கோடாங்கி கோபாலகிருஷ்ணன், 40 வயதான கருப்பசாமி, 36 வயது ராஜராஜன்,  மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 55 வயது ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய சிறப்பு விசாரணையில், ஒத்த கை பொன்குமார் திருட்டு தொழிலுக்காக அவ்வப்போது பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், காடல்குடி, பெருநாழி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து சென்றுள்ளார். அப்போது நாகலாபுரத்தை சேர்ந்த நாடக நடிகர் கோடாங்கி கோபாலகிருஷ்ணன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒத்த கை பொன் குமார் ஆங்காங்கே கிராம கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு தொழிலை அரங்கேற்றி விட்டு அங்கு கிடைத்ததை சுருட்டிக்கொண்டு நேராக நாகலாபுரத்துக்கு  வந்து சரக்கு அடித்து விட்டுத் தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் நாகலாபுரம் வந்த ஒத்த கை பொன் சாமி குமார் அங்கு காட்டுப்பகுதியில் ஏற்கனவே மது போதையில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கோடாங்கி கோபாலகிருஷ்ணன்  உள்ளிட்ட நான்கு பேருடன் சேர்ந்து மீண்டும் மது குடித்துள்ளார்.  போதை உச்சத்தில் ஒத்த கை பொன் குமார் ஒரு கட்டத்தில்  தனிமையில் இருக்க பெண்ணை ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளார். அப்போது பணம் பேரம் பேசியதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒத்த கை பொன் சாமி குமாரை,  கோடாங்கி கோபாலகிருஷ்ணன்  கீழே தள்ளியுள்ளார்.  தலையில் காயமடைந்த ஒத்த கை பொன் சாமி குமார், திருட்டுத் தொழிலுக்காக மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் கோடாங்கி கோபாலகிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு போதையில் இருந்த நான்கு பேரும் சேர்ந்து கல்லைத் தூக்கி தலையில் போட்டு ஒத்த கை பொன்குமாரை கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்று விட்டதாக போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

கைதான நாடக நடிகர் கோடாங்கி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த  தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

செய்தியாளர் - எஸ். மூர்த்தி

சார்ந்த செய்திகள்