
கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி இன்று அதிகாலை வெடித்ததில் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கொதிக்கும் நிலையில் இருந்த இரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொதிக்கும் இரசாயனக் கழிவு நீர் புகுந்ததால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளன.
குடிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் டேங்கர்கள் வெடிப்பதும், அதன் கழிவு நீர் ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டதாகவும், ஆண்டுக்கு இருமுறையாவது இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகவும் அங்குள்ள மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.