
கடந்த பிப்ரவரி மாதத்தின் போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாராட்டிப் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று பத்திரிகை ஒன்றியில் சசி தரூர் பாராட்டி எழுதியிருந்தார். கேரளா அரசை பாராட்டி சசி தரூர் கூறிய கருத்து, மாநில காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் பாராட்டிப் பேசியிருந்த சசி தரூர் கூறிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சி தலைமையும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர் ஓரங்கட்டப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை சசி தரூர் பாராட்டி பேசியதற்காக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பயங்கரவாத முகாம்களை குறித்து இந்தியா நடத்திய தாக்குதல் சிறப்பானவை என்றும், பாகிஸ்தானுடனான பிரச்சனையை பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டார் என்றும் இதற்கான முழு மதிப்பெண்களையும் அவருக்கு கொடுக்கிறேன் என்று பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ.க அரசையும் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கள், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியில் போதுமான ஜனநாயகமும், பேச்சு சுதந்திரமும் இருக்கிறது, ஆனால், சசி தரூர் அதனை மீறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். காங்கிரஸ் தலைமை இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகிறது.
இந்நிலையில், சசி தரூர் தான் கூறிய கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்ததையொட்டி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “மோதல் ஏற்பட்ட நேரத்தில், நான் ஒரு இந்தியனாகப் பேசினேன். வேறு யாருக்காகவும் பேசுவது போல் நான் ஒருபோதும் நடிக்கவில்லை. நான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல. நான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல. நான் என்ன சொன்னாலும், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், தனிப்பட்ட முறையில் என் மீது பழி சுமத்தலாம், அது பரவாயில்லை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறினேன். எனது கருத்தை நிராகரிக்க மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. கட்சியிடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை” என்று கூறினார்.