பல்கலை. தேர்தல்களில் தோல்வி எதிரொலி! - மத்திய அரசுக்கு எதிராக போராடும் ஏ.பி.வி.பி.
நாடு முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவர் சங்கத்தேர்தல்களில், இந்துத்துவ அமைப்பான ஏ.பி.வி.பி. படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், பொதுத்தளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக இந்த அமைப்பு பனாரஸ் பல்கலை. மாணவிகளின் தாக்குதலைக் கண்டித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுக்கழகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்படுவதாக கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீட்டை முற்றைகையிடச் சென்றனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மாணவிகளும், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைக்கண்டித்து டெல்லியில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை முற்றுகையிடப் போவதாக ஏ.பி.வி.பி. அமைப்பு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், மத்தியில் ஆளும் பாஜக அரசையோ, உபி.யில் ஆட்சி நடத்தும் யோகி அரசையோ இந்த அமைப்பு விமர்சனங்கள் செய்யாமல் தவிர்த்துள்ளது.
ஏ.பி.வி.பி. எனும் இந்துத்துவ மாணவர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கவுஹாத்தி பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் பல்கலைகழகம் உள்ளிட்டவற்றில் நடைபெற்ற மாணவர் சங்கத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்