பீடி, சிகரெட், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்
விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு!
பீடி, சிகரெட், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அளித்துள்ளது.
கடந்த செப்.21ல் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், மிட்டாய்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் அந்த கடைகளில் விற்க தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் சிறுவர்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்தவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அருண் ஜா கூறியதாவது, உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு புகையிலை பொருட்களின் விற்பனையை கண்காணிக்க முடியும். நாட்டில் எந்த இடத்தில் சிகரெட் கடைகள் இயங்கினாலும் அதனை அரசால் கண்டுபிடிக்க முடியும்.
சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டுபிடிக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் கூடாது. புகையிலை விற்கும் கடைகள் மிட்டாய்கள், சிப்ஸ், பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்க அனுமதிக்கக்கூடாது. மத்திய அரசின் கடிதத்திற்கு பல மாநில அரசுகள் நேர்மறையான பதில் அளித்துள்ளன.
இதன் பலனை புரிந்து கொண்டுள்ளன. மத்திய அரசு கோரிக்கை தான் விடுத்துள்ளது. எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.