Skip to main content

மஹிந்திராவின் பரிசுக்கு பின் இருக்கும் கதை! 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

The story behind Mahindra's prize!

 

அசர்பைஜானில் செஸ் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில், இந்தியா சார்பில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். 

 

உலக அளவில் உற்றுநோக்கப்பட்ட இந்த இறுதி ஆட்டத்தில் கார்ல்சனுக்கு கடுமையான எதிர் ஆட்டத்தை வழங்கினார் பிரக்ஞானந்தா. இறுதிப் போட்டியின் இரண்டு ஆட்டங்களும் சமனில் முடிந்தது. இதனால், வெற்றியைத் தீர்மானிக்கும் டை பிரேக்கர் முறையில் போட்டி நடைபெற்றது. அந்த டை-பிரேக்கர் சுற்றிலும் கடும் போட்டி நிலவியது. இறுதியில்  பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பெற்றார். 

 

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு அவர் எளிதில் வென்றுவிடாதபடி கடுமையான ஆட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். இந்நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கு தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 25ம் தேதி ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அந்த வாழ்த்து பதிவுக்கு கீழ் ஒருவர், ‘அவருக்கு (பிரக்ஞானந்தாவுக்கு) மஹிந்திரா காரை பரிசளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபருக்கு பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிவில், “உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். உங்களைப் போன்ற பலர், எனக்கு ஒரு கார் பரிசளிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது. 

 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை இந்த மூளைக்கூறு சார்ந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிக்க, ஊக்குவிக்க விரும்புகிறேன். (வீடியோ கேம்களின் பிரபல்யம் அதிகரித்துள்ள போதிலும்!). 

 

இது இ.வி. (எலக்ட்ரானிக்) களைப் போலவே நமது உலகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பெற்றோருக்கு ‘எக்ஸ்.யு.வி 400 இ.வி.’யை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் பெற்றோரான நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு, தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அவருக்குத் தங்களின் அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் எங்கள் நன்றிக்கு உரியவர்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்