பொருளாதார வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டியும், பணமதிப்பு இழப்புமே காரணம் - பாஜக மூத்த தலைவர்
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக செயலாற்றியவர் யஷ்வந்த் சின்கா. இவர் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜி.எஸ்.டியை அமுல்ப்படுத்துவதில் அவசரப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டியை ஜூலைக்கு பதிலாக அக்டோபர் மாதத்தில் அமுல்ப்படுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், அதைக் கையாளுவதிலும், செயல்படுத்துவதிலும் மோசமாக மத்திய அரசு நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தவிர்க்க முடியாத பேரழிவு என்றும், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி நாட்டை விதங்களில் பாதித்து வருவதாகவும் இவர் கூறியுள்ளார். இதனால், அறிவித்த அளவிற்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரமுடியாது. மேலும், தனியார் முதலீடுகளையும் ஈர்க்கமுடியாமல் போனதால், 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த வீழ்ச்சியை சரிகட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்