பிறந்த ஆறு நிமிடங்களில் ஆதார் அட்டை வழங்கப்பட்ட குழந்தை!

இந்தியா முழுவதும் அரசு நலத்திட்ட உதவிகளைப்பெற ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டைக்காக வரிசைகளில் கால்கடுக்க காத்துக்கிடக்கின்றனர் பொதுமக்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலம், ஓஸ்மனாபாத் பகுதியைச் சேர்ந்த பாவ்னா சந்தோஷ் ஜாதவிற்கு ஆறே நிமிடங்களில் ஆதார் அட்டை கிடைத்துள்ளது.
ஓஸ்மனாபாத் பகுதியில் உள்ள மகளிர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைதான் பாவ்னா. இந்த குழந்தை இன்று மதியம் 12.03 மணிக்கு பிறந்துள்ளது. உடனே, இந்தக் குழந்தையின் பெற்றோர் ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டையானது குழந்தை பிறந்த ஆறு நிமிடங்களில், அதாவது 12.09 மணிக்கே ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது ஓஸ்மனாபாத் பகுதிக்கு பெருமை அளிக்கும் விஷயம். கூடிய விரைவில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் வழங்கி, அதனை அவர்களது பெற்றோர்களின் ஆதார் எண்ணோடு இணைக்கும் பணியைத் தொடங்கவுள்ளோம் என அப்பகுதியின் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்