
அதிமுக பொது வேட்பாளராக ஒருவர் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் அவருக்கு பாஜக சார்பில் பாடுபடுவதாக தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சென்னை தி.நகரில் தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறேன். அதிமுக வேட்பாளர் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான் பாஜக சார்பில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு பேசி வந்தோம். இபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் என்னைத் தொடர்பு கொண்டு 31 ஆம் தேதி வரை காத்திருப்பதாகவும் அதற்கு பின் வேட்பாளரை அறிவிக்க போவதாகவும் கூறிய பின்பே வேட்பாளரை அறிவித்தார். அதேபோல் ஓபிஎஸ் என்னை தொடர்பு கொண்டு இபிஎஸ் வேட்பாளரை அறிவித்து விட்டார். அதனால் நான் அறிவிக்கிறேன் எனக் கூறி அறிவித்தார்.
பாஜகவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் உட்கட்சிப் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்பது பாஜகவின் முடிவு. நேற்று கூட இரு தரப்பினரையும் நேரில் சந்தித்து, பொது வேட்பாளராக ஒரு வேட்பாளர் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டால் களப்பணியாற்றி வெற்றி பெற பாஜக சார்பில் பாடுபடுவோம் என்ற பாஜகவின் நிலைப்பாட்டை சொன்னோம். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தோம். கட்சியின் நலனுக்காக இபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தோம். ஓபிஎஸ் கையெழுத்து போடுவதற்குத் தயார் என்று சொன்னார்” என்றார்.