Skip to main content

“பாஜகவில் கலகம்; தலைமைக்கு எதிராக 'மாஜி'யின் ஆதரவாளர்கள் ஆலோசனை” - பரபரக்கும் கோவை!

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

 

BJP party issue ex state president supporters plan against leadership in  Coimbatore 

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து 'அவர்' மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்றபிறகு பாஜகவின் தேசிய மேலிடத்தின் உத்தரவுகளுக்கேற்ப செயல்பட்டு வருகிறார் நயினார். இந்த நிலையில், முன்னாள் தலைவரின் ஆதரவாளர்கள், நயினார் தரப்போடு,  'ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்கிற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைவான மாதங்களே இருக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார் முன்னாள் மாநிலத் தலைவர்.

இதற்காக, தனது ஆதரவாளர்கள் தரப்புக்கு சில உத்தரவுகள் 'மாஜி'யிடமிருந்து சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க இன்று (11.05.2025) ஒன்று கூடுகின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று  பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடக்கிறது. பாஜகவின் விவசாய அணித் தலைவர் நாகராஜ் தலைமையில் இந்த கூட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், முன்னாள் தலைவரின் ஆதரவாளர்கள் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனக் கோவையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து விசாரித்தபோது, “முன்னாள் மாநில தலைவரின் ஆதரவாளர்கள் இனியும் அவரது உத்தரவின் படி நடந்து கொள்வது என்றும், கொங்கு மண்டலத்தில் அவரின் வலிமையை நிரூபிக்கத் தொடர்ந்து அவரது தலைமையில் செயலாற்றுவது என்றும், கோவை மாவட்ட பாஜகவினர் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. அதற்காகத்தான் இந்த கூட்டம். மொத்தத்தில், முன்னாள் மாநில தலைவரின் ஆதரவாளர்கள் எப்போதும், அவரது ஆதரவாளர்களாகவே அரசியல் செய்வது என்கிற முடிவை எடுத்துச் செயல்படுவதுதான் இந்த கூட்டத்தின் நோக்கம்” என்கின்றனர் கோவை பாஜகவினர். கோவையில் நடக்கும் தனது ஆதரவாளர்களின் இத்தகைய ஆலோசனைக் கூட்டம் போல, கொங்கு மண்டலத்தில் அடங்கிய  மாவட்டங்களிலும் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் முன்னாள் மாநிலத் தலைவர். 

சார்ந்த செய்திகள்