
தமிழக அரசை விமர்சித்து வருகிற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி., துறை மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி,மகளிர் சுய உதவிக்குழு என பெண்கள் தலைநிமிர்ந்து சுயச்சார்புடன் வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பணியாற்றும் பெண்களில், நாட்டிலேயே முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு தான். இப்படி, யாரையும் நம்பாமல் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெண்களுக்கு ஏற்படுத்திய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும்.
இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, பித்தம் தெளிய எதைத் தின்பது என்ற குழப்பத்தில் உளறுகிறார்.பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு இதுவரை பதில் சொல்லாத எடப்பாடிக்கு, திமுக அரசைக் குறைகூற என்ன தகுதி இருக்கிறது? அந்தப் பெண்ணின் அபயக் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறதே? எடப்பாடிக்கு கேட்கவில்லையா? தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தின் பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்புணர்வும், தாக்குதலும் காவல் துறையினரால் நடத்தப்பட்டது. அப்போது எங்கே போனார் எடப்பாடி? அதிமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு நடந்தது. அப்போது எங்கே போனார் ?
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பெண் ஒருவர் நேரடியாக பாலியல் புகார் சொன்னாரே? அப்போது எங்கே போனார் ? பாஜக ஆளும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட போது எங்கே போனார் எடப்பாடி? பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடப்பது, இந்திய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எடப்பாடி அவர்களே, நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது தமிழ்நாடு அரசை அல்ல... பாஜக அரசைத் தான். தைரியம் இருக்கிறதா? என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.