/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pollachi-9-final-art.jpg)
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (12.02.2019) 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “தனக்கு ஏற்கனவே பழக்கமான சபரிராஜன் என்பவருடன் காரில் சென்ற போது சபரிராஜனுடன் இருந்த திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனர்” எனத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும்.
இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா (மகளிர்) கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேலும் இந்த வழக்கில் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு என இருதரப்பு வாதங்களும், அரசு சார்பில் பதில் வாதமும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (28.04.2025) முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார்.
இதனையடுத்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். முதல் குற்றவாளியான சபரி ராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனையும், சதிஷுக்கு 3 ஆயுள் தண்டனையும், வசந்த குமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனையும், ஹேரேன் பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருளானந்தம், அருண்குமார் மற்றும் பாபுவுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.” என நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-art-2_2.jpg)
இந்நிலையில் இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)