Skip to main content

'தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதை ஏற்க முடியாது' - அன்புமணி கண்டனம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

'It is unacceptable for the corporation to step aside after handing it over to the private sector'-Anbumani condemned

 

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான  358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்  காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது.

 

மாநகராட்சியின் 358 பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாக செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செயல்படுத்துவதற்கு மாறாக இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல. இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

 

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன? அதிமுக அரசின் செயலுக்கும், திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

 

இவை அனைத்தையும் கடந்து, தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு விநியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றன. இதுவா மக்கள் நல அரசுக்கு அடையாளம்?

 

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப் பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.