கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு
விவசாயிகள் போராட்டம்: 167 பேர் கைது!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகங்களை புதன்கிழமையன்று போராட்டங்கள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெற்ற இந்தப் போராடத்தில் 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். சந்தைகளில் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும். வறட்சியைத் தாங்காமல் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய் வேண்டும். காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போhட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் பி.வீராச்சாமி மற்றும் நிர்வரிகள் அடைக்கப்பன், மதியழகன், ராமாமிர்தம், எல்.வடிவேல், டி.லட்சாதிபதி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ், துணைத் தலைவர் சா.தோ.அருணோதயன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், மற்றும் நிர்வாகிகள் கே.தங்கவேல், எம்.ஆர்.சுப்பையா, எம்.சண்முகம் மற்றும் 38 பெண்கள் உட்பட 112 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வே.வீரையா, தென்றல் கருப்பையா, ஏ.பாலசுப்பிரமணியன், கரு.ராமநாதன், கலந்தர், லெட்சுமணன் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இரா.பகத்சிங்