Skip to main content

சிவாஜி மணிமண்டப திறப்புவிழாவில் முதல்வர் பங்கேற்கவேண்டும் - நடிகர் சங்கம் கோரிக்கை

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
சிவாஜி மணிமண்டப திறப்புவிழாவில் முதல்வர் பங்கேற்கவேண்டும் - நடிகர் சங்கம் கோரிக்கை

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்கவேண்டும் என நடிகர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூத்த நடிகர் சிவாஜி கணேசனின் உருவச்சிலை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த சிலை அகற்றப்பட்டு அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மணிமண்டபத்தின் திறப்புவிழா வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும், அமைச்சர்கள் திறந்துவைப்பார்கள் என்றும் அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் கலந்துகொண்டு, நடிகர் சங்கத்தையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இன்று காலை சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வார் என அரசு தரப்பில் இருந்து மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து நடிகர் சங்கத்தின் சார்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் அது அந்த மாபெரும் கலைஞனின் பெருமைக்கு தகுதியுடையதாக இருக்கும். ஒருவேளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், அவரே முன்னின்று இந்த மணிமண்டப திறப்புவிழாவை நடத்தி வைத்திருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்