Skip to main content

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் ஓணம் வாழ்த்துச்செய்தி!

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் ஓணம் வாழ்த்துச்செய்தி!

கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகை தினமான ஒணம் பண்டிகை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துச்செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர்

மக்களுக்காக, மக்களுக்காகவே நல்லாட்சி நடத்திய மகாபலி மன்னனை வஞ்சகம், சூழ்ச்சி காரணமாக அழித்து விட்டாலும், கேரள மாநில மக்கள் நன்றியுணர்ச்சியோடு மாமன்னன் நினைவை போற்றும் வகையில் புகழ்பாடி கொண்டாடும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழியை பேசுகிற லட்சக்கணக்கான கேரள மாநில மக்கள் தொழில் நடத்தி வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களும் மலையாள மக்களும் சகோதர உணர்வோடு நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். 

தமிழகத்தில் வாழ்கிற கேரள மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்பதற்காக திருவோணம் திருநாளை கொண்டாடும், தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வாழும், மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த திருவோணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னன் மகாபலியின் வரலாறு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி,  கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதே போல் தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது. வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு மூன்றடி மண் கேட்க, மகாபலியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்த  விஷ்ணு, மூன்றாம் அடியை வாமணன் காலில் வைத்து பாதாள உலகத்திற்குள் தள்ளினார். பாதாள உலகத்தில் தள்ளப்பட்ட மகாபலி ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காண வரும் நாளே திருவோணம்  திருநாளாக உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

மகாபலி மன்னனின் பாரம்பரியம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ, அதேபோல் தமிழகத்தின் பாரம்பரியத்தை சதி செய்து அழிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மகாபலி மன்னன் தாம்  அன்புடன் நேசித்த மக்களை காண வரும் இந்த நாளை, மகாபலி மன்னன் வதம் செய்யப்பட்ட நாளாக திரிக்கும் முயற்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இவை முறியடிக்கப்பட வேண்டும்.

மன்னர்கள் மக்களை நேசிக்க வேண்டும், நல்லவர்களை சதி செய்து அழிக்கும் முயற்சி நடந்தால் அதை முறியடிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் திருவோணம் திருநாள் கொண்டாடப்படும் இந்த  நன்னாளில், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும், அநீதிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடவும் அனைத்து மக்களும் சபதம் ஏற்போம்.  

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

திராவிடநாட்டின் அங்கமான கேரள மக்கள் திருவோணத்தையொட்டி அத்திப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடும் பாரம்பரியமிக்க  பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் இதை "அறுவடை திருநாள்" என்றும் சொல்வார்கள். இந்த பண்டிகையை சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற பேதமின்றி, அனைவரும் ஒன்று கூடி முக்கிய திருவிழாவாக நாளை (04.09.2017) ஓணம்பண்டிகை கொண்டாடுகின்றனர். 
       
மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியிலே சண்டை, சச்சரவு, துன்பம் ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், அந்த மன்னன் வரம்பெற்று திருவோணத்தன்று நாட்டுமக்களை சந்திக்க வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நன்நாளையே ஓணம் பண்டிகை என்றழைத்து கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இனிய நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று, எல்லா வளமும் பெற்று, நல்வாழ்வு வாழவேண்டும் என தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்