
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டச் செயலாளராக இருக்கும் வடக்கு மாவட்டத்தில் உள்ள விராலிமலை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான கூட்டங்கள் விஜயபாஸ்கர் தலைமையில் ஆங்காங்கே நடந்து வருகிறது.

அதே போல இன்று கறம்பக்குடி அருகே மழையூர் கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ்(1989 - 1991) கலந்து கொண்டார். மழையூர் கூட்டம் முடிந்து துவார் கிராமத்தில் நடக்கும் பூத் கமிட்டி கூட்டத்திற்கு விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கார்களில் புறப்பட்டுச் சென்றனர். அதில் நெடுஞ்செழியன் வேறு ஒரு காரில் சென்றுவிட அவருடன் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் (68) சென்றுள்ளார். ஏராளமான கார்கள் வேகமாக அணிவகுத்து சென்றுள்ளது.

இந்த நேரத்தில் கெண்டையன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கார்கள் சென்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த மீன் வியாபாரி பழனி தனது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது ராஜீவ் சென்ற கார் பழனியின் மோட்டார் சைக்கிள் மீது மோதி தூக்கி வீசியதுடன் கார் அருகில் உள்ள கழிவுநீர் தடுப்புக்கட்டைகளில் ஏறி டயர் உடைந்து கார் கவிழ்ந்து உருண்டு கிடந்தது. இந்த விபத்தில் ராஜீவ், கார் ஓட்டுநர் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் ரமணி(58), மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற பழனி உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டனர். கார், பைக் ஆகியவை உடைந்து நொறுங்கியது.

அதிமுக நிர்வாகிகளின் கார் விபத்தில் சிக்கிய தகவல் முன்னாள் சென்ற விஜயபாஸ்கருக்கு தெரிந்ததும் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயங்களுடன் இருந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதிமுக பூத்கமிட்டி கூட்டத்திற்கு வந்த மாஜியின் கார் விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.