Cuddalore family problem women passes away with her children police investigation

Advertisment

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாம்பேட்டை அடுத்த வேகாக்கொல்லை, பிள்ளைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவரான ஐயப்பன் (34) என்பவரின் மனைவி சுதா(30). இவர்களுக்கு திலோக்நாத் (4) என்ற மகனும், ஐஸ்வர்யா (3) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இதனையடுத்து நேற்று மதியம் தம்பதிகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் சுதாவின் மாமனார் சண்முகம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரது பேர குழந்தைகள் இருவரும் பிணமாக கிடந்தனர். மேலும் மருமகள் சுதா தனது சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதையடுத்து நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சினேகப்பிரியா, வடலூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுதா, தனது இரண்டு குழந்தைகளையும் தனது ஆடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதற்கிடையில் கணவர் ஐயப்பன், நேற்று வீட்டில் இல்லை. அதனால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஓடப்பன்குப்பத்தைச் சேர்ந்த சுதாவின் தந்தை சுப்பிரமணியன் காவல்துறையில் அளித்த புகாரில், ‘தனது பேரக் குழந்தைகள் மற்றும் மகள் உடலில் காயங்கள் உள்ளது. அவர்கள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. சுதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதகவும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வந்து 3 பவுன் நகையை வாங்கிச் சென்ற நிலையில், கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு குழந்தையுடன் சுதா உயிரிழந்துள்ளார். எனவே சாவில் மர்மம் இருக்கிறது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.