
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பகல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்தியாவின் இந்த பதில் தாக்குதலுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர். பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை ஆபரேஷ சிந்தூர் திடமாக நிரூபித்துள்ளது.
"நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்" என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, "ஆபரேஷன் சிந்தூரை" வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது. இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்னா மத்திய அரசுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகள். வாழ்க, வெல்க தாய்த் திருநாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.