கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சியிலுள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் வசிப்பவர் கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி திவ்யா (27) விதவை பெண்ணான இவர் தனது தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

Advertisment

neyveli issue

இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அ.தி.மு.க கெங்கைகொண்டான் நகர செயலாளர் மனோகர் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி திவ்யாவிடம் ஆதார் கார்டு, ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு தனது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி அங்கு சென்ற அந்த பெண்ணை அவர் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். இந்நிலையில் திவ்யா வேலைசெய்யும் ஜவுளிகடைக்கு வந்த மனோகரனின் மனைவி மகா என்கிற மகாலட்சுமி பாதிக்கப்பட்ட பெண் திவ்யாவை 'எனது கணவரிடம் ஏன் பேசுகிறாய்? பழகுகிறாய்?' என்று கூறி செருப்பால் அடித்தாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் தாங்க முடியாத திவ்யா எலி மருந்து சாப்பிட்டுள்ளார். அவர் வாந்தி எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தார் உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா பேருந்து நிலையம் எதிரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அதிமுக நகர செயலாளர் மனோகரன் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொன்னின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

neyveli issue

Advertisment

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அதையடுத்து திவ்யாவின் சடலத்தை பெறாமல் போராட்டம் நடத்திய திவ்யாவின் உறவினர்களும் அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணின் குடும்பத்திற்கு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி ரூபாய் எட்டு லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், 11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்யாவின் மகனுக்கு படிப்பு முடித்தவுடன் அரசு வேலை வழங்க வேண்டும். இதில் தொடர்புடைய மனோகரன் மற்றும் அவரது மனைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்ட உறவினர்கள் திவ்யாவின் சடலத்தை பெற்று அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டனர்.