
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஐதர்புரம் பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(28) மற்றும் ஐதர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (24) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் குடியாத்தம் கே.வி.குப்பம் வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இவர்கள் இருவரும் நூற்றுக்கணக்கான பைக்குக்களை திருடி விற்பனை செய்து அதில் மது, மாது என ஜாலியாக இருந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரும் திருடி பதுக்கி வைத்திருந்த 26 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அருண்குமார் மற்றுன் பிரவீன்குமார் இருவரையும் கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.