Skip to main content

மயிலாடுதுறையில் காவல்துறை - விவசாயிகள் தள்ளுமுள்ளு

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
மயிலாடுதுறையில் காவல்துறை - விவசாயிகள் தள்ளுமுள்ளு



கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு வழங்கபட்டு வரும் காப்பீட்டு நிவாரணத்தில் இருந்து வரும் குளறுபடிகள் கலைந்து  உடனே நிவாரணம் வழங்க வேண்டும். 2013 - 14 இல் இருந்து முறையாக இயங்காமல் மூடு விழா கண்டு வருவதை கண்டித்தும் தலைஞாயிறு சர்க்கரை ஆலையை இயங்க செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோக்கைகளை முன் வைத்து  கரும்பு விவசாய சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும். மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய முயன்று கைதாகியுள்ளனர்.

நாகை மாவட்டம்  மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனுக்கொடுக்க விவசாயிகள் பேரணியாக வந்தனர். அங்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் காவல்துறையினர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு போகும் இரண்டு வழிகளையும் பூட்டி விட்டு காவலுக்கு நின்றனர். பேரணியாக வந்த விவசாயிகள் கோட்டாச்சியரிடம் மனு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பாதுகாப்பாக நின்ற இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளிட்ட காக்கிகள் ஆர்.டி.ஓ உங்களை பார்க்க முடியாது, உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கூறி விட்டார். அதனால் நீங்கள் உள்ளே போக முடியாது. இங்கிருந்து களைந்து சென்று விடுங்கள் என கோபத்தோடு சொன்னார் இன்ஸ்பெக்டர் அழகேசன். 

கோபமடைந்த விவசாயிகள் எங்களின் உரிமைக்காக அவரை சந்திக்க வந்திருக்கிறோம் நான்கு பேரையாவது அனுமதியுங்கள். எங்களின் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு வந்து விடுகிறோம். என்றனர் விவசாயிகள் . அதற்கும் மறுத்தார் இன்ஸ்பெக்டர் அழகேசன். கோபமடைந்த விவசாயிகள் கேட்டை உடைத்து விட்டு உள்ளே செல்ல முயன்றனர். ஒருபுறம் காக்கிகள், கேட்டை திறக்க விடாமல் அரனாக நிற்க, மறுபுறம்  விவசாயிகள் கேட்டை தள்ள பிரச்சினை பெரிதாகி, தள்ளுமுள்ளானது. விவசாயிகள் இன்ஸ்பெக்டர் அழகேசனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை டி.எஸ்.பி அருட்செல்வன் தலையிட்டு நான்கு பேரை மட்டும் ஆர்.டி.ஓ வை சந்திக்க அனுமதித்தார். தலைவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு உள்ளே சென்றதும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், அடித்து இழுத்து சென்று கைது செய்தனர். பெண்கள் உள்ளிட்ட 50 க்கும் அதிகமானோரை  கைது செய்துள்ளனர்.
விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடியதை அவமானபடுத்திய இன்ஸ்பெக்டர் அழகேசனை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போகிறோம் என்கிறார்கள் விவசாயிகள்,

க. செல்வகுமார்

சார்ந்த செய்திகள்