Skip to main content

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்த நாம் தமிழர் கட்சி

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்த நாம் தமிழர் கட்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சோளங்குருணி என்ற ஊரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு சுமார் 250 மாணவ மாணவிகள் கல்வி பயிலுகிறார்கள்.

இந்தப்பள்ளியில் அடைப்படைவசதிகளான கழிவறைகள், அதற்கான தண்ணீர் வசதி போன்றவைகள் ஏதுமற்ற நிலையில் இங்கு பயிலும் மாணவ மாணவிகள் அவதியுறுகிறார்கள் என்பதை அறிந்து இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தென் மண்டல நாம்தமிழர் கட்சி சார்பில் செய்து கொடுக்க முடிவு செய்து அதற்கான களப்பணிகளில் இறங்கியுள்ளனர்.

முதல் வேலையாக பள்ளியை ஆய்வுசெய்து பார்த்தபொழுது மாணவர்களுக்கான கழிப்பிடமும், மாணவிகளுக்கான கழிப்பிடமும் தண்ணிர் வசதியில்லாமலும் அதற்கான குழாய்கள்கூட இல்லாமலும், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் கழிவறைக்கோப்பைகள் உடைந்த நிலையில் மேற்கூரை இல்லாமலும், ஆசிரியைகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள்கூட தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

மாணவிகள் வேறு வழியின்றி பள்ளியின் எதிரே உள்ள கன்மாய்க்குள்ளே சென்று சிறுநீர் கழிக்கின்றனர் என்பதை அங்குள்ள மக்கள் கூறக்கேட்கும்போது மனம் ஒடிந்து போகின்றது.

இதுபோக, உடைந்துபோன தளம், மின்விளக்குகள் இல்லாமல் இருட்டடைந்த வகுப்பறை, பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக இருப்பதினால் இரவுநேரங்களில் உள்ளே நுழைந்து சமூகவிரோதிகளின் கூடாத செயல்கள், காற்றாடி இல்லாத வகுப்பறைகள், வகுப்பறை முழுவதும் அழுக்கடைந்து வெள்ளையடிக்கப்படாத சுவர்கள் என நிறைய குறைகளோடு இயங்கிக்கொண்டிருந்தது.

முதற்கட்டமாக கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதியை உடனே இந்த மாணவர்களுக்கு செய்துதர முடிவெடுத்து தென்மண்டலச் செயலாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் அனுமதிகேட்டபோது "தாமதிக்காமல் உடனே செய்" என்ற பதிலால் உற்சாகமடைந்தவர், உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் வினோத்துளிர் அவர்களிடம் எண்ணத்தை தெரிவித்தபோது மகிழ்வோடு இத்திட்டத்தை வரவேற்று, முறையாக பணிகளைத் தொடங்க மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிபெற்றுத்தருவதாக உறுதியளித்தார்கள்.

அவர்கள் அளித்த உறுதியின்படி 09.10.2017 அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் தொடக்கக் கல்வி அலுவலர், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரிய, ஆசியைகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் தீபாவளி விடுமுறை முடிந்தவுடன் முதல் வேலையாக ஆழ்குழாய் (போர்வெல்) அமைத்து வேலையை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் இந்த சீரிய முயற்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற முயற்சிகளையும், மக்கள்நலத்திட்டப் பணிகளையும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்குமாறு நாம் தமிழர் உறவுகளை சீமான் அறிவுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்