
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் வாய்க்கால் கரையோரம் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருபவர் பாஸ்கர்-கலைவாணி தம்பதி. வயதான தம்பதியான இவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக 4 நாய்களை வளர்த்து வந்தனர். நேற்றிரவு நாய்கள் பலமாக குரைத்த நிலையில் இன்று காலை ஒரு நாய் மர்மமான முறையில் உயிரிழந்தது. இரண்டு நாய்கள் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதிகள் இதுகுறித்து இன்று மதியம் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகிரி அடுத்த விளக்கேத்தியில் வாய்க்கால் கரையோர தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியான ராமசாமி-பாக்கியம்மாள் வளர்த்து வந்த நாய் மர்மமான முறையில் உயிரிழந்த அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனியாக வசித்து வரும் முதியவர்களின் பாதுகாப்புக்கு வளர்த்த நாய் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதும், இரண்டு நாய்கள் மாயமாகி இருப்பதும் பாஸ்கர் -கலைவாணி ஆகியோர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.