
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரு தரப்பு இளைஞர்களின் வாய்த்தகராறு ஒரு தரப்பு குடியிருப்பு பகுதியில் மோதலாக வெடித்து 17 பேர் காயமடைந்தனர். வீடுகள், கார்கள், பைக்குகள் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தையடுத்து ஒரு தரப்பில் 21 பேரும் மற்றொரு தரப்பில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேர் என மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் பிரச்சனைக்கு மூலக்காரணமாக உள்ள நிலம் சம்மந்தமாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் மேலும் சில முடிவுகளோடு சமாதான கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் வடகாடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு சம்மந்தமாக மத்திய மண்ட ஐஜி ஜோஷி நிர்மல்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல்குமார் திடீரென வடகாடு கிராமத்திற்கு வந்து பிரச்சினைக்குரிய இடம் மற்றும் மோதல் நடந்த பகுதியை ஆய்வு செய்து சென்றுள்ளார்.