
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

தொடர்ந்து போர் சூழல் தணிந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு இன்று ஈரோடு மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, 'இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. போரில் இந்திய ராணுவம் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணி நடத்தி இந்திய ராணுவத்தினரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு 'ஆப்ரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தால் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே முன்னாள் அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த மனுவில் கூறியுள்ளனர்.