Skip to main content

“சாத்தான்குளம் படுகொலை தொடரும்!!!” -மிரட்டிய காவலர்களுக்கு நடந்தது என்ன?

 chennai-nagapattinam-police-man-suspended

 

“டேய் தம்பிங்களா வாங்க அடுத்த லாக்கப் டெத்துக்கு ஆள் கிடைக்கலன்னு பார்த்தோம். ஆள் கிடைச்சிருச்சு. உங்களுக்கு ஆசனவாய் இருக்குதா தம்பிங்களா” தூத்துக்குடி மாவட்ட, சாத்தான்குள போலீஸின் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டைப் படுகொலை இந்தியாவையே உலுக்கிகொண்டிருக்கும் சூழலில் சென்னை ஆயுதப்படை போலீஸ் சதீஷ் முத்து இப்படி முகநூல் மூலம் ஈவு இரக்கமில்லாமல் அதிகாரத் திமிறில் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சமூக ஊடகங்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல், இக்கொடூர படுகொலையைக் கண்டித்த பால் முகவர்கள் இனி காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் போடமாட்டோம் என்று அறிவிப்பு கொடுத்ததை தொடர்ந்து, “இனி வரும் காலங்களில் சத்தியமாக பால் எடுத்து வருபவன் எவனாயினும் சரி சீட் பெல்ட், யூனிஃபார்ம், மாஸ்க், ஹெல்மெட் இல்லாமல் சென்றால் கண்டிப்பாக கேஸ் விழும். கிரிமினல் நாய்ங்க நீங்களே இப்படி பேசும்போது போலீஸ் கரெக்ட்டா இருந்து பார்த்ததில்லையேடா. இனிமே பார்ப்பீங்க. அய்யோ அம்மான்னு கதறுறப்ப தெரியும். நீ எங்க லிஸ்ட்டுலயெ இல்ல. நீயா வந்து ஏண்டா மாட்டிக்கிறீங்க” என்று தமிழே சரியாக எழுதத்தெரியாமல் (ஃபேஸ்புக் பதிவு ஸ்க்ரீன்ஷாட்டில் எழுத்துப் பிழைகளை பார்க்கலாம்) மிரட்டியிருப்பது சமூக வலைதளத்தில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில், ஆசனவாயில் லத்தியை விடுவோம் என்கிற ரீதியில் முகநூல் மூலம் பொதுமக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த எம். சதீஷ்முத்துவிடம், முகநூல்மூலம் நாம் விளக்கம் கேட்டபோது அவர் விளக்கமளிக்கவில்லை. மாறாக, அவரது முகநூலில், “சாத்தான்குளத்தில் நடந்த நிகழ்வை வைத்து காவல்துறைக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக  என்னுடைய ஃபேஸ்புக் ஐ.டி.யை உபயோகித்து யாரோ வெண்டுமென்றே மேற்கண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்கள்” என்று அந்தர்பல்டி அடித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

muthu

 

ஃபேஸ்புக் ஐ.டியை ஹேக் செய்தததாக சைபர் கிரைமில் எப்போது புகார் கொடுத்தீர்கள்? அந்தப்புகார் நகல் கிடைக்குமா? என்று நாம் கேட்ட கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. காரணம், அவரது ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாக அவர் கூறியதே பொய். இந்நிலையில், அவரது பேஸ்புக்  பதிவால்  பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான கண்டனத் தீ பற்றி எரிய ஆரம்பித்ததால் சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்த சதீஷ் முத்துவை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

பால் முகவர்களை மிரட்டி பதிவிட்ட ரமணன் என்கிற ரமணன் ரோகித் யாரென்று நாம் முதலில் அவரது முகநூலில் உள்ள டூவீலர் எண்ணை வைத்து ட்ரேஸ் செய்தபோது, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது அப்பா ஜி.எஸ்.சம்பந்தம் என்பதும் தெரியவந்தது. அவர், எஸ்.ஐ.யாக இருந்தவர். ரமணன் குறித்து நாம் மேலும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மத்தியில் விசாரித்தபோது, நாகை மாவட்ட டி.எஸ்.பி. முருகவேலுவுக்கு டிரைவராக இருக்கிறார் என்பது தெரியவந்தது. டி.எஸ்.பி.-க்கு டிரைவராக இருப்பதால் யாருக்கும் அடங்காமல் பொதுமக்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல் பதிவுகளைத் தொடர்ந்து முகநூலில் பதிவுசெய்திருப்பதும் தெரியவந்தது. டி.எஸ்.பி டிரைவர்  என்பதால் யாரையும் மதிக்காமல் இன்ஸ்பெக்டர்களையே மிரட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

ak

 

அதைவிடக்கொடுமை, 2019 செப்ரம்பர் 9- ஆம் தேதி முகநூலில் பதிவிட்ட ரமணனின் பதிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதாவது, ‘காவலரை பேசிய வாயில் மனித கழிவை வைத்து கும்மாங்குத்து குத்தப்பட்டு உள்ளாடையை அவிழ்த்து ஒரு மாதத்திற்கு உட்காரவே முடியாத அளவிற்கு தே.... நாய்க்கு  மிகவும் சிறப்பாகச் சடங்கு செய்யப்பட்டது. நாளை பாத்ரூமில் வழுக்கி விழவும் வாய்ப்புள்ளதாக தகவல்’ மிகக் கொடூரமாக அப்பட்டமான மனித உரிமை மீறல் பதிவை எழுதியுள்ளார். இதுகுறித்து, தீவிர விசாரணை செய்தால்தான் அன்று காவல்நிலையத்தில் நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வரும்.

 

hj

 

மேலும் பல ஆபாச ஃபேஸ்புக் பக்கங்களையும், குறிப்பாக பள்ளி மாணவிகளின் ஆபாச பக்கங்களுக்கெல்லாம் லைக் செய்து பின் தொடர்ந்திருக்கிறார் என்றும் இவரது முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் சமூக வலைத்தள போராளிகள். இவ்வளவு கொடூர மனம் கொண்ட வக்கிர காக்கி ரமணன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ். இதுகுறித்து, நாம் அவரைத்தொடர்புகொண்டு பேசியபோது, “ரமணன்  குறித்து புகார்கள் வந்ததும் முதலில் ஆயுதப் படைக்கு மாற்றி டி.எஸ்.பி. மூலம் விசாரணை நடத்தினோம். விசாரணையின்போது, உங்கள் முகநூலில் இப்படியொரு பதிவு வந்துள்ளதே யார் பதிவு செய்தது என்று கேட்டபோது, தான் தான் அந்தப்பதிவை எழுதியதாக ஒப்புக்கொண்டார். கோபத்தில் பதிவு செய்ததாகக் கூறினார். அதனால், ஜூன் 29ஆம் தேதி உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்தோம். மேலும், அவர் எழுதிய பல்வேறு பதிவுகள் குறித்து விரிவான விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தயக்கமில்லாமல் புகார் கொடுக்கலாம்” என்றார் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக.

 

http://onelink.to/nknapp

 

காவல்நிலையத்தில் கொடூர படுகொலை நடந்து மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் தொடர்ந்து பல போலீஸார் இப்படிச் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள் என்றால் அப்பாவிகள் பலர் இப்படி காவல்நிலையங்களில் ஆசனவாயில் லத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. காவல்துறையினர் செய்யும் தவறுகளை மறைக்காமல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நேர்மையான போலீஸாருக்கு பொதுமக்களின் சார்பில் எப்போதும் சல்யூட்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்