Skip to main content

ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது : தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!

ஜனநாயக நாட்டில் ஆசிரியர்களும் சங்கம் அமைக்கும் உரிமை உள்ளது என ஐகோர்ட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை பதில் மனு!


ஆசிரியர் சங்கத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அனுமதி வழங்கும்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு உத்தரவிடக் கோரி அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை  ஏன் கட்டாயமாக்க கூடாது?

ஆசிரயர் சங்கத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது?

பள்ளிக்கு சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஆங்கில வழி வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் என்ன?

அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளையே பெற்றோர் தேர்வு செய்ய காரணம் என்ன?

பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது?

என்பன உள்ளிட்ட 20 கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் சார்பாக இணை செயலர் நந்தகுமார் பதில்மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் "தமிழகத்தில் தொடக்க கல்வியில்  2016 -17ம் ஆண்டில் 13 ஆயிரத்து 789 பள்ளிகளில், 4 லட்சத்து 84 ஆயிரத்து 498 மாணவர்கள் ஆங்கில வழி வகுப்புகளில் படித்து வருகின்றனர்.

உயர்நிலை கல்வியை பொறுத்தவரை, 2016 - 17 ல் 3 ஆயிரத்து 916 பள்ளிகளில், 66 ஆயிரத்து 451 மாணவர்கள் ஆங்கில வழி வகுப்புகளில் படித்து வருவதாகவும் ஆங்கில கல்விக்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்மட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 64.16 சதவிகித மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் 35.84 சதவீதத்தினர் மட்டுமே படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை அதிகரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது வருவாகவும்,தனியார் பள்ளிகள் சேவை மனபான்மையுடன் செயல்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானது என்றும், ஆனால் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதாகவும், இருப்பினும் பல ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வகுப்புகளுக்கு சரியாக வராத ஆசிரியர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 910 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க வகுப்பறையில் காமிரா அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும். மேலும், வகுப்பறையில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த 2016 ஆண்டே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற உயர்நீதிதன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனநாயக நாட்டில் சங்கம் அமைக்க அனைத்து பிரிவுகளுக்கு உரிமை உள்ளது என்றும் ஆசிரயர் சங்கங்களின் போராட்டங்களை மாணவர்கள் கவனிப்பதால் அவர்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்