Skip to main content

வெளிநாட்டினரையும் கவர்ந்த விதைப்பந்து... புதுமனை புகுவிழாவில் விதைப்பந்து!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

அரசு விழாக்கள் தொடங்கி காதணி, கல்யாணம், பிறந்த நாள் என்று அத்தனை விழாக்களிலும் மரக்கன்றுகளை நட்டு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி பல லட்சம் மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் வளர்க்கவும், வளரவும் துணையாக நின்றவர் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி. அவர் கலந்து கொள்ளும் அத்தனை விழாக்களிலும் மரக்கன்றுகளே முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு அவர் மறைந்த சில நாட்களில் கஜா புயல் வந்து அவர் நட்டு வளர்த்த பல ஆயிரம் மரங்கள் உள்பட கோடிக்கணக்காண மரங்களும் அடியோடு சாய்ந்தது. 

seed balls like the foreign peoples pudukkottai  House warming function innovative thinking

அழிந்த மரங்களை மீட்டெடுக்க புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த கிராம இளைஞர்கள், வெளிநாடு, வெளியூர்களில் வேலை செய்தாலும் விடுமுறைக்கு ஊருக்கு வந்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி உள்ளனர். ஒரு பக்கம் மரக்கன்றுகள் நடவு, மறுபக்கம் விதைப் பந்துகள் வீச்சு என்று நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு இளைஞர்கள் மட்டுமின்றி மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவர்களும் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக பயன்படுத்தி வருகின்றனர். அதே போல தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த எஸ்.டி.டி.வெங்கடேசன். புது வீடு கட்டி திறப்பு விழா நடத்தினார். 
 

புதுமனை புகுவிழாவிற்கு வந்த அனைவருக்கும் சணல் பையில் வைத்து தாம்பூலப்பைகளையும் வழங்கினார். பரிசுப் பையை வாங்கிச் சென்றவர்கள் வழக்கம் போல தேங்காய் பழம் இருக்கும் என்று வீட்டில் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 
 

சணல் பையின் உள்ளே அழகாக பேக் செய்யப்பட்டிருந்த சிறிய அட்டைப் பெட்டியில் ஐந்தாறு மண் உருண்டைகள் இருந்தன. பின்னர் தான் அனைவருக்கும் புரிந்தது. வழக்கமாக தேங்காய், வாழைப்பழம் அல்லது மிட்டாய் வழங்குவதற்குப் பதில், விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக விதைப்பந்து வழங்கியது. 
 

இதுகுறித்து எஸ்.டி.டி.வெங்கடேசன் கூறியதாவது, மருத்துவம் படித்து வரும் என் மகன் வெ.துரைஅரசன், தகவல் தொழில் நுட்பம் படித்து வரும் வெ.கோவிந்தராஜ் ஆகியோர் ஆலோசனைப்படி, விருந்தினர்களுக்கு விதைப்பந்து வழங்கினோம். 
 

கஜா புயலுக்கு முன்னர் சோலை வனமாக காட்சி அளித்த எங்கள் பகுதி, லட்சக்கணக்கான மரங்களை புயலால் இழந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், மழைக்கு காரணமான மரங்களை வளர்க்கவும் எங்களால் முடிந்த சிறு பங்காக விதைப்பந்து வழங்கினோம்.  தற்போது பருவமழைக் காலம் என்பதால் எங்கே தூக்கி வீசினாலும் விதைப்பந்தில் உள்ள விதைகள் முளைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் இதனை வரவேற்றனர் என்றார். 
 

அன்பளிப்பாக வழங்கிய விதைப்பந்து பாக்கெட்டில், அதில் என்ன வகையான விதைகள் உள்ளன. எங்கெங்கு அவற்றை, எவ்வாறு நடவேண்டும் என்ற குறிப்பு உள்ளது.  அதாவது வேம்பு, மூங்கில், பூவரசு, புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் விதைகள், விதைப்பந்தில் இருந்தன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. வித்தியாசமான இந்த முயற்சிக்கு, இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல விதைப்பந்துகளை கேட்டுப் பெற்றுச் சென்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்